தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில், மேலும் 500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பேட்டரியால் இயங்கும் பேருந்தை சென்னையில் இயக்குவது குறித்து இங்கிலாந்து நாட்டின் சி-40 என்ற அமைப்பின் பன்னாட்டு நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் பி.டபிள்யு.சி.டேவிதார், போக்குவரத்துத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, சி-40 அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியது:
இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி-40 என்ற அமைப்பானது உலகின் முக்கிய பெருநகரங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தகுந்த தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் இத்தகையப் பேருந்துகளை இயக்க உதவவுள்ளது. இதற்காக இந்த பன்னாட்டு அமைப்புடன் போக்குவரத்துத்துறையின் சார்பில் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த அமைப்பைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுவினர் கடந்த 4 நாள்களாக சென்னையில் முகாமிட்டு எந்தெந்த வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவது, அந்த பேருந்துகளுக்கான மின்மாற்றிகளை (டிரான்ஸ்ஃபார்மர்) எங்கு அமைப்பது என்பது குறித்து கலந்தாலோசித்தனர்.
இறுதியாக இத்திட்டம் குறித்த ஆய்வறிக்கையினை என்னிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர். வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற பேட்டரி பேருந்துகளை இயக்கும்போது நடைமுறையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளைச் சார்ந்தோர்கள் பங்கேற்கும் கூட்டம், அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்குமாறு எங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மின்சாரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் விலை மிக அதிகம். ஆனால் இயக்கப்படும் செலவு குறைவு. மேலும் இவ்வகை பேருந்துகளை குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளோடு இயக்க முடியும். உதாரணமாக ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 240 கிலோ மீட்டர் தூரத்தை 54 பயணிளோடு மட்டும் இந்த பேருந்தை இயக்க முடியும்.
ஆனால் அலுவலக நேரத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பேருந்தின் பயண தூரம் குறையும். இந்த நிலை டீசல் வாகனத்தில் இல்லை. மேலும், பேருந்துகளை சார்ஜ் செய்கின்ற சார்ஜிங் பாய்ன்ட் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
விரைவில் 500 புதிய பேருந்துகள்:
அண்மையில் 515 புதிய பேருந்துகள் பொதுமக்கள் சேவைக்கு தமிழக முதல்வரால் அர்ப்பணிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஓரிரு மாதங்களில் அடுத்த 500 பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள ஏனைய 4000 பேருந்துகளையும் படிப்படியாக இயக்கிட வழிவகை செய்யப்படும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.