சென்னையில் சுமார் 177 கி.மீ. தொலைவுக்கு 6 புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
சென்னை நகரின் முக்கிய அடையாளமாக மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாகநடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பாதைகளின் பணிகள் முடிவடைந்து வரும் 2017ஆம் ஆண்டு முழு அளவில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.
இந்நிலையில் சென்னையில் நீண்ட கால பொதுப் போக்குவரத்துத் திட்டத்தின் அடிப்படையில், மெட்ரோ ரயில்களை புதிய வழித்தடங்களில் இயக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சாத்தியம் உள்ள புதிய வழித்தடங்களுக்கான ஆய்வை அண்மையில் மேற்கொண்டனர். அந்த ஆய்வில் செங்குன்றம்- சிறுசேரி, கலங்கரைவிளக்கம்- பூந்தமல்லி, விம்கோநகர்- சோழிங்கநல்லூர், பல்லாவரம்- ஆவடி, வண்டலூர்- பட்டாபிராம், திருமங்கலம்- பருத்திப்பேட்டை இடையே மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட 6 வழித்தடங்களையும் சேர்த்து மொத்தமாக 177.3 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ வழித்தடங்கள் வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதில், எந்தச் சாலை வழியாக ரயில் பாதை, ரயில் நிலையம் அமைக்க வேண்டும், தேவையான நிலங்கள், ரயில் பாதை அமைக்கும்போது எந்தெந்தக் கட்டடங்கள் பாதிக்கும், அதற்கான இழப்பீட்டுத் தொகை, இதில் அரசு நிலம், தனியார் நிலம் எவ்வளவு, போக்குவரத்து மாற்றம் செய்வது எப்படி, எந்த ரயில் நிலையம் சுரங்கப் பாதையில் இருக்கும் என்பன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனம் 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கையாக தயார் செய்து அளிக்கும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary: More 6 in Chennai Metro Rail lines. Officials review.