மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவுத் தேர்வுக்கு வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2019-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 2019 மே மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் தங்கள் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.

பிற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார்களா என்பதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *