பயணிகளுக்கு புது வசதியை ஏற்படுத்தும் விதமாக மேக்ஸ்டர் உடன் இந்திய ரயில்வேத்துறை ஒப்பந்தம் ஏற்படுத்தவுள்ளது. நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வெகுதூரப் பயணங்களுக்கான முதல் தேர்வாக இருப்பது ரயில் வழிப் பயணமாகும். இதுபோன்ற நீண்ட வழி ரயில் பயணங்களின் போது புத்தகம் வாசிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரயில்வேத்துறை (ஐஆர்சிடிசி) பிரபல ஆன்லைன் வாசிப்பு நிறுவனமான ‘மேக்ஸ்டர்’ உடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர் தங்களது பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்போது இந்த வசதியை பெறும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி சராசரியாக 6.6 கோடி வாடிக்கையளர்களுடன் இயங்கி வரும் இந்திய ரயில்வேத்துறையில் இனி ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்ஃபோன், டேப்ளட் மற்றும் லேப்டாப்களில் ஆடோமோடிவ், வணிகம், காமிக்ஸ், கல்வி, சினிமா, ஃபேஷன், ஃபிட்னஸ், லைஃப்ஸ்டைல், செய்தி, அரசியல், தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட 40 பிரிவுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான செய்தித்தாள்கள், தினசரி, வார மற்றும் மாதப் பத்திரிகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் 6 வயது முதல் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கான விருப்பத் தேர்வாகவும் அமையப்பெற்றுள்ளது.

ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு இது வெவ்வேறு சலுகைகளுடன் வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் முதல்முறை 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பின்னர் ஒரு நாளுக்கு ரூ.20, ஒரு வாரத்துக்கு ரூ.30, ஒரு மாதத்துக்கு ரூ.99 மற்றும் ஒரு ஆண்டுக்கு ரூ.499 என வசூலிக்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களின் அளவில்லா வசதியை இதில் பெற முடியும்.

தேவைப்படுவதை ஒருமுறை பதிவிறக்கம் செய்து கொண்டால், பின்னர் இணைய வசதியின்றி கூட அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே பயண நேரங்களில் இணை வசதியில் தடை ஏற்பட்டாலும் அதுகுறித்து கவலைப்படத்தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *