புதிய தலைமை செயலகத்திற்காக கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நவீன மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ.212 கோடி செலவில் புதிய மருத்துவ கல்லூரி கட்டும் பணியும் உடனே தொடங்கப்பட்டது.
புதிய மருத்துவ கல்லூரி மொத்தம் 7 மாடிகளுடன் கூடிய 7 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக, 3 கட்டிடங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுகள் ஆகியவை செயல்பட தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய மருத்துவ கல்லூரிக்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கி இருப்பதை அடுத்து மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது. புதிதாக செயல்பட உள்ள இந்த மருத்துவ கல்லூரி, தமிழகத்தில் தொடங்கப்படும் 20-வது அரசு மருத்துவ கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு அதற்காக 2 கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது. நில அரசின் ஒதுக்கீட்டில் 85 இடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில், புதிய மருத்துவ கல்லூரியை திறப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைக்கிறார்.
மேலும், தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் அவர் திறக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தொடங்கப்படும் புதிய மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்றே தொடங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில், முழுவதும் குளு, குளு வசதி செய்யப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமையை இந்த புதிய மருத்துவ கல்லூரி பெறுகிறது.
English Summary:New Government Medical College in Chennai Omanturar.