seawater desalinationசென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகும். சென்னையில் ஏற்கனவே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் புதியதாக சென்னையின் தெற்குப் பகுதியில் உள்ள நெம்மேலி என்ற பகுதியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஒன்றை நிறுவத் தேவையான நிதி ஆதாரங்களை இறுதி செய்வதற்காக, ஜெர்மனி அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழு வரும் அக்டோபர் 5-ஆம் தேதி சென்னை வரவுள்ளது.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் நீர் இருப்பு தற்போது மிக வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை நிறுவ தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய நீர் நிலையத்தை நிறுவத் தேவையான நிதியுதவியை வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஜெர்மன் அரசு நிதி நிறுவனத்துக்கு கடந்த வாரம் அனுப்பியது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.1,371 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை நிறுவத் தேவையான நிதி ஆதாரங்களை இறுதி செய்வதற்காக ஜெர்மனி அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழு (கேஎஃப்விவி) அக்டோபர் 5-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக குடிநீர் வாரிய வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் இறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு சென்னை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் மத்திய சென்னை, தென் சென்னை பகுதியில் உள்ள சோளிங்கநல்லூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 9 லட்சம் மக்கள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary:New Sea Water Desalination in Chennai.