ஆசிய நாடுகளில் ஒன்றாக விளங்கி வரும் வடகொரியா நாடு, அண்டை நாடான தென்கொரியாவுக்கு மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் உள்பட உலகின் பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. பயங்கர அழிவுகளை விளைவிக்கும் அணுசக்தி வெடிகுண்டுகள் மற்றும் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதனை செய்து வருகிறது. இதனை கண்டித்து சமீபத்தில் இந்நாட்டின் மீது பொருளாதார தடையை ஐ.நா. விதித்தது. இருப்பினும் வடகொரியா தனது பரிசோதனையை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியாவின் அரசு விவகாரங்கள் சமூக இணையதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் இருந்து வெளியே கசிவதால், இந்நாட்டில் நேற்று முதல் பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் ஆகிய இணையதளங்களை முடக்குவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது.

வடகொரியாவின் தொலைத் தொடர்புத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் இணையதளங்களுடன், அரசுக்கு எதிரான கொள்கைகளை வெளியிடும் இணையதளங்கள், பாலியல் சம்பந்தமான இணையதளங்களும் இந்த வாரத்தில் முடக்கப்படும் என்றும், பியாங்யாங்கில் ஏப்ரல் 1 முதல் இந்த இணையதளங்களை பார்க்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவில் மிகக் குறைந்த நபர்களே இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களும் இனி அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary: North Korea bans Facebook and Twitter.