இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீடிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் குறைந்த செலவில் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சலுகை ஓராண்டுவரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த சலுகை முடிந்தது. இந்நிலையில், இலவச ‘ரோமிங்’ வசதியை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த சலுகை காரணமாகவே அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இணைப்புக்குள் வந்துள்ளதாக தெரிய வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வேலைபார்த்து வருபவர்கள் ஆகியோர்கள் 2 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்தனர். நாடு முழுவதும் இலவச ரோமிங் முறை அமலுக்கு வந்ததால், தற்போது ஒரு சிம்கார்டு மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்களும், நாடு முழுவதும் சுமார் பத்து கோடி பேரும் பயனடைந்து வந்தனர்.
தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல், இந்த திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்திய பின்னர் இந்த போட்டியை சமாளிக்க ஒரு தனியார் நிறுவனமும் தென்னிந்தியாவிற்கான இலவச ரோமிங் வசதியை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : One-year extension of free roaming across India. BSNL notice.