சென்னை நகர மக்களுக்கு கடற்கரையை அடுத்து பெரும் பொழுதுபோக்காக இருப்பது சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விலங்கியல் பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த பூங்காவிலுள்ள ஒரு விலங்கை சென்னை பச்சையப்பன் கல்லூரியின் விலங்கியல் முதுகலை, ஆராய்ச்சித் துறை தத்து எடுத்துள்ளது.

இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால், பூங்கா நிர்வாகத்தில் பொதுமக்கள் நேரடியாகப் பங்கு கொள்ள முடிகிறது. மேலும் விலங்கு இருப்பிடங்கள் பராமரிப்பு, உணவுகளைத் தயார் செய்தல், உணவுகளை விலங்குகளுக்கு வழங்குதல் போன்ற பணிகளை நேரடியாக மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், நிறுவனங்கள் ஆகியோர் விலங்குகளிடம் நேரடியாக தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும், விலங்குகளைப் பற்றிய தகவல்களை நேரடியாகத் தெரிந்து கொள்ளவும் வழிவகை ஏற்படுகிறது. அண்மையில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இயங்கும் விலங்கியல் முதுகலை, ஆராய்ச்சித் துறை பவள விழா (75-ஆம்ஆண்டு) கொண்டாடப்பட்டது. இவற்றை நினைவுகூரும் வகையில், இந்தத் துறையில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் விலங்குகள் தத்தெடுப்பதற்காக ரூ.2,905-ûஐ திரட்டியுள்ளனர். இந்த நிதிக்கான கேட்பு காசோலையை, சனிக்கிழமை பூங்கா துணை இயக்குநரிடம் வழங்கினர்.

இந்தத் தத்தெடுப்பின் கீழ், இந்திய மயில் ஒன்றுக்கு ஒரு ஆண்டு உணவுக்கான செலவினை கல்லூரி ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary: Pachayappan college adulated peacock from Vandalur Zoo.