சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்பட மொத்தம் ஐந்து காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருந்த போதிலும் அவர் தொடர்ந்து கமிஷனர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனருடன் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணிபுரியும் ராதாகிருஷ்ணன், எஸ்.ஜார்ஜ், மகேந்திரன் ஆகியோரும் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இதுகுறித்து அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:-

1. தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக இனிமேல் பணியாற்றுவார்.

2. போலீஸ் பயிற்சி கூடுதல் டி.ஜி.பி. மகேந்திரன், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இனி அவர் பயிற்சி டி.ஜி.பி.யாக பணியாற்றுவார்.

3. தமிழ்நாடு சிறைத்துறை இயக்குனராக உள்ள கூடுதல் டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சேர்மனாக பொறுப்பு ஏற்பார். சிறைத்துறை இயக்குனர் பொறுப்பையும் அவர் கூடுதலாக முழு நேர பணியாக கவனிப்பார்.

4. சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தற்போது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளார். அவருக்கும் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி அவர் டி.ஜி.பி. அந்தஸ்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனராக தொடர்ந்து பணியாற்றுவார்.

5. மிசோரம் மாநில அரசில் முதன்மை செயலாளராக பணியாற்றும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. லாலாம்சங்கா, டி.ஜி.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் பணிபுரிவார்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி. அந்தஸ்தில் சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை அலங்கரித்த முதல் பெருமை பெற்றவர் ராஜசேகரன் நாயர். அவர் டி.ஜி.பி. அந்தஸ்தில் சுமார் 1 வருட காலம், சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார். சென்னை போலீஸ் வரலாற்றில் தற்போது 2-வதாக டி.ஜி.பி. அந்தஸ்தில் கமிஷனர் பதவி வகிக்கும் பெருமை டி.கே.ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: 5 ADGPs in Police Department are promoted as DGP’s.