தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து ஏற்கனவே மத்திய தேர்தல் கமிஷனர்கள் சென்னை வந்து அனைத்து முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அனேகமாக வரும் மே மாதம் முதல்வாரம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் 29ஆம் தேதி அல்லது மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் கமிஷன் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் மற்றும் ஒரே பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் அதையும் நீக்குதல் ஆகிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியபோது:

வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் பணி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இணையதளத்திலும், வாக்காளர் பதிவு அதிகாரியின் அறிவிப்பு பலகையிலும் நீக்கப்பட உள்ள வாக்காளர் பட்டியல் 24ஆம் தேதிக்கு வெளியிடப்படவுள்ளது.

இதேபோல் கிராமசபை மற்றும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில் பட்டியலை படிக்கும் நிகழ்ச்சி 26ஆம் தேதி வெளியாகும். தேர்தலுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் ஏற்கனவே வந்துள்ளது. இன்னும் 30 ஆயிரம் எந்திரங்கள் இந்த மாத கடைசிக்குள் வந்துவிடும்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. யாராவது ஓட்டுக்கு பணம் கொடுப்பது தெரியவந்தால் பொதுமக்கள் அதை போட்டோ எடுத்து தேர்தல் கமிஷனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் இன்டர்நெட் மூலமும் புகார் அனுப்பலாம். இதை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே எஸ்.எம்.எஸ். அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும்.

தேர்தல் சமயத்தில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டம், வாகன அனுமதி கேட்பது உள்ளிட்டவைகளுக்கு அரசியல் கட்சியினர் விண்ணப்பத்தை நேரில் கொண்டு வந்து கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த கால விரையத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். உடனே நாங்கள் அதற்கு பதில் அளித்து அனுமதி வழங்குவோம்.

இதேபோல் பல்வேறு பணிகளை எளிமையாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

English Summary: Send photos of Party Peoples giving money to public in Whatsapp, Election Commissioner.