சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு நாளை துவங்குகிறது. இந்த தேர்வில் 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு நாளை துவங்க உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 7,068 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 4.60 லட்சம் மாணவியர் உட்பட 8.61 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். மேலும் 24 ஆயிரம் தனி தேர்வர்கள் 300க்கும் மேற்பட்ட சிறை கைதிகளும் தேர்வில் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு மையத்திலும் குறைந்த பட்சம் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில் மாணவ மாணவியர் காப்பி அடித்தல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க 4,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் எந்த பதட்டமும் பயமும் இன்றி தேர்வை எழுதுமாறு பள்ளி கல்வி இயக்குனரகம் கேட்டு கொண்டுள்ளது. தேர்வு நேரம் என்ன?

* காலை 10:00 மணி முதல் 12:45 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் பழைய முறைப்படி, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு முக்கிய பாடங்களுக்கு மட்டும் காலை 10:00 மணி முதல் பகல் 1:15 மணி வரை தேர்வு நடக்கும்

* மொழி பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு, ஒரே தாளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது

* தமிழ் உள்ளிட்ட, மாநில மொழி பாடங்களுக்கு, நாளையும்; ஆங்கிலத்துக்கு, மார்ச், 5ம் தேதியும் தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 7ல் தேர்வு துவங்க உள்ளது. அனைத்து பாட தேர்வுகளும், மார்ச், 19ல் முடிகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *