பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு ஒன்றை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை விண்ணப்பிக்க மே 22 ஆம் தேதி கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்வதை போல பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்து கொள்ளப்படுவர்.

தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் வரும் மே 4ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பத்தை www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்தும் அதற்குரிய கட்டணமான ரூ.150ஐ செலுத்தி டவுன்லோடு செய்து கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சாதிச் சான்றை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள், முடநீக்கியல் பட்டயப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபோல் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படும் ஒரு ஆண்டு ஒப்பனைக் கலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கும் பிளஸ்-2 முடித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

English Summary: Application Forms Distribution date for Polytechnic Colleges Direct 2nd Year is going to start.