சினிமாவில் நடித்து ரஜினி, கமல், விஜய், அஜீத் போல பெரிய நடிகராக வேண்டும் என்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக சென்னை உள்பட பல நகரங்களில் நடிப்பு பயிற்சி அளிக்கும் நிலையங்கள் இருக்கும் நிலையில் கூத்துப் பட்டறை என்ற நடிப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது திரையுலகில் மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் அனுபவம் உள்ளவர்கள் இதில் சேரவுள்ள மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளனர்.

இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

திறன்மிக்க பல்வேறு சிறந்த கலைஞர்களை திரையுலகுக்கு உருவாக்கித் தந்த கூத்துப்பட்டறைகள் இன்றைக்கு போதிய வரவேற்பு இன்றி அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம், நடிப்புத் துறைக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று நடிப்புத் துறை மீது ஆர்வம் கொண்டு வரும் இளைஞர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் நாடகப் பயிற்சி, நடிப்புப் பயிற்சியை அளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது 15 நாள் குறுகியகால பயிற்சித் திட்டமாகும். ஒரு பிரிவுக்கு 30 பேர் வீதம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் 3 மாத பயிற்சிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழகம் குறுகியகாலப் பயிற்சிக் கட்டணத்தை ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யலாம் என முடிவு செய்துள்ளது. இதற்கு கல்வித் தகுதியோ, வயது வரம்பு எதுவும் கிடையாது என்றார்.

English Summary: Tamilnadu Open University opens the special courses for Acting.