இந்தியாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகிய சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி மின்சார ரெயில்களும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் நிலையத்தை தினமும் சுமார் 10 லட்சம் பயணிகள் வரும் நிலையில் இந்த பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து சிரமமின்றி தங்கள் வீடுகளுக்கு செல்ல ப்ரீபெய்டு ஆட்டோ, மற்றும் கார் வசதிகள் உள்ளன. ஆனால் இந்த சேவை காலை 5 மணி முதல் இரவு 9.30 மணிவரை மட்டுமே உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் செல்லும் ஆட்டோ மற்றும் டாக்ஸியில் அதிக கட்டணம் பயணிகளிடம் இருந்து வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோர்ரி, சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா ஆகியோர் எடுத்த தீவிர முயற்சியின் பலனாக தமிழக ரெயில்வே போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் பேசி 24 மணி நேரமும் ப்ரீபெய்டு கார் மற்றும் ஆட்டோக்கள் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரெயில் பயணிகள் வசதிக்காக ப்ரீபெய்டு கார்கள் நேற்று முதல் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் ஒன்றரை மடங்கு கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

முதலில் ப்ரீபெய்டு கார்கள் இந்த திட்டத்தில் இயக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து ப்ரீபெய்டு ஆட்டோக்களும் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தன. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ப்ரீபெய்டு கார், ஆட்டோக்கள் இரவு பகலாக பயணிகளுக்கு கிடைக்கும்.

இது குறித்து சென்ட்ரல் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் கூறியதாவது: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ப்ரீபெய்டு கார் நேற்று முதல் இயக்கப்படுகிறது. இதில் தற்போது ப்ரீபெய்டு ஆட்டோ டிரைவர்களும் இணைந்துள்ளனர். பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் ப்ரீபெய்டு, கார், ஆட்டோக்களுக்கு ஒன்றரை மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பகலில் ஒரு இடத்துக்கு செல்ல ரூ.100 கட்டணம் என்றால் இரவு நேரத்தில் ரூ.150 வசூலிக்கப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்து ஒப்புக் கொண்டதன் பேரில் ப்ரீபெய்டு கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கிடைக்கும் வசதி ஏற்பட்டு இருக்கிறது. மேலும் ப்ரீபெய்டு ஆட்டோ கார்கள் தவிர மற்ற ஆட்டோக்கள், கார்கள் உள்ளே நிற்க அனுமதி இல்லை. பயணிகளை இறக்கி விட்டுவிட்டு உடனே வெளியே செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

English Summary: Prepaid Autos and Cars will be available at Central Station 24 Hours.