திருவண்ணாமலை :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தன்று மலை ஏற, 2,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாளை காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரை, மட்டும் அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. கற்பூரம், பட்டாசு, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தினமும் மாலை, 6:00 மணிக்கு, வேலுாருக்கு இயக்கப்படும் ரயில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக, இன்றும், நாளையும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இரவு, 11:20 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.வேலுாரில் இருந்து, சென்னை கடற்கரைக்கு, தினமும் காலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் பயணியர் ரயில், நாளையும், 24ம் தேதியும், திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்படுகின்றன.வேலுார் கன்டோன்மென்டில், காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, காலை, 9:30 மணிக்கு, சென்னை கடற்கரை நிலையம் வந்தடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *