சென்னை, ‘கேரளா மற்றும் தமிழக மலைப்பகுதிகளில், ஒரு வாரமாக பெய்த கனமழை, நாளை முதல் வெகுவாக குறையும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக, நாடு முழுவதும் பெய்து வருகிறது. வழக்கமாக, வட மாநிலங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் இப்பருவமழை, இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், குறிப்பாக, கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன், தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும், கனமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. கர்நாடகாவில் கனமழை பெய்ததால், காவிரியில் அதிக நீர் திறந்து விடப்பட்டு, காவிரி டெல்டா பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.இந்நிலையில், ஒரு வாரமாக மிரட்டிய கனமழை, நேற்று முதல் குறையத் துவங்கியுள்ளது. நாளை முதல் இன்னும் குறையும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில், மலை பகுதிகளில் மட்டும், இன்றும் கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ‘வங்கக் கடலின் வடகிழக்கு பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என, வானிலை மையம் கணித்துள்ளது.26 செ.மீ., மழைநேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சின்ன கல்லாரில், 26 செ.மீ., மழை பெய்துள்ளது. வால்பாறை, 21; நீலகிரி தேவாலா, 11; பெரியார், 9; செங்கோட்டை, 7; பழனி, கூடலுார், 4; ஊட்டி, பாபநாசம், குழித்துறை, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.