passport1

வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவையான முக்கிய ஆவணமான பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற ஒருசில விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது. இதனால் மற்றவர்கள் போல் இல்லாமல் அரசு ஊழியர்களுக்கு மிக எளிதில் பாஸ்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இனிமேல் பாஸ்போர்ட் பெற அடையாளச் சான்றுகளோ அல்லது, ஆட்சேபணையின்மைச் சான்றிதழோ பெற தேவையில்லை என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஒரு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்டுக்களை பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும்.  ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து, கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம்

இவ்வாறு பி.டபிள்யூ.சி.டேவிதார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English Summary:Relaxation of passport procedure for government employees