Heavy-rains-161115வங்காள விரிகுடா கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் காரணமாக கனமழை பெய்து, அதன் வெள்ள நீரே இன்னும் பல இடங்களில் வடியாத சூழ்நிலையில் மீண்டும் வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து இலங்கையை தாண்டி 1000 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சின்னமானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த புயல் சின்னம் இன்று கடலூரை தாக்கும் என்றும் அதன் பிறகு திசை மாறி வந்து நாளை சென்னை நகரை தாக்கும் என்றும் அந்த சமயத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் தமிழகத்தை நெருங்குவதால் இன்று முதல் முதல் 18ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கடுமையான மழை பொழிவு இருக்கும் என்று சென்னை தேசிய பேரிடர் மேலாண்மை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, கடலூர் மட்டுமல்லாது புதுவையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் ஏரி, குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது வருகிறது.

பலத்த மழை காரணமாக காய்கறி செடிகள் நீரில் மூழ்கி உள்ளதால் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. எனவே காய்கறிகள் மழையில் சேதம் அடைந்துள்ளதால் காய்கறிகளின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்குமாறு சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி இன்று உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாட்டை சுழற்றியடித்துவரும் பெருமழையால் கடலூர், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Heavy rains to continue, schools and colleges remain closed