பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் தற்போது கல்லூரிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கல்லூரியில் சேர்ந்த பின்னர் பாதுகாப்பாக தங்குவதற்கு விடுதிகள் அவசியம் தேவை. இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு 8 விடுதிகளும், மாணவியருக்கு 5 விடுதிகளும் செயல்படுகின்றன. இதில், உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் சேரத் தகுதியுடைவர்கள்.

இந்த மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ ஒரு லட்சத்திற்குள்ளும், இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் கல்வி நிறுவனத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தொலைவுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த தொலைவுக்கான விதிமுறை மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், கல்லூரி விடுதியின் காப்பாளர்கள் ஆகியோரிடம் இலவசமாகப் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அவற்றைப் பெற்ற இடங்களிலேயே சமர்ப்பிக்கலாம். சாதிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விடுதியிலும் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

English Summary : Chennai Collector ordered a new Hostel for Backward class Students.