சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தரமான கல்வி, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழ்நிலை, ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னையில் தற்போது 165 மழலையர் பள்ளிகள் உள்ளது. மழலையர் வகுப்புகளில் படிக்கும் அனைத்து மழலையர்களுக்கும் விலையில்லா புத்தகங்கள் வண்ணச் சீருடைகள் மற்றும் காலணிகளும் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்பட்டு வருகின்றது. வீட்டில் போதுமான கற்றல் சூழ்நிலை இல்லாத மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.79 ஆயிரம் செலவில் அதிநவீன முறையில் 2 உண்டு உறைவிடப்பள்ளிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
* பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை, சட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விகள் பயில ரூ.1 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
* சி.எஸ்.எல். நிறுவனத்துடன் இணைந்து ரூ.2 கோடி செலவில் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
* அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.2¼ கோடி செலவில் கணினி ஆசிரியர்கள் மற்றும் கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
* டி.எப்.ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி மிகச்சிறப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.
* அனைத்து மாணவர்களுக்கும் சுமார் ரூ.15 லட்சம் செலவில் விலையில்லா தேர்வு விடைத்தாள், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா செய்முறை பயிற்சி ஏடு, ஆய்வுக்கூட மேற்சட்டை மற்றும் கண் பாதுகாப்பு கண்ணாடி அளிக்கப்பட்டு வருகிறது.
* உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.64 லட்சம் செலவில் நகல் எந்திரம் (போட்டோ காப்பியர்), மின் ஆக்கிகள் (ஜெனரேட்டர்கள்) ரூ.1 கோடியே 20 லட்சம் செலவிலும், வள வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ்) ரூ.3 கோடியே 28 லட்சம் செலவிலும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பான நலத்திட்டங்களினால் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு இந்த ஆண்டு 10-ம் வகுப்பில் 92-ல் இருந்து 95 ஆகவும், 12-ம் வகுப்பில் 85-ல் இருந்து 86 ஆகவும் உயர்ந்து உள்ளது.
மேலும் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பான சூழலுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு புதிதாக கணினிகள் வழங்குதல், அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: surveillance cameras in Chennai schools. Chennai Corporation