தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் பரவி இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்துவிட்டது. அதனால் கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 4 செமீ, மதுரை விமான நிலையம், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சிவகங்கை, வேலூர் மாவட்டம் மேலாலத்தூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.