சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பலவித திட்டங்கள் செயல்பட்டு வந்தபோதிலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, முழு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையுள்ளது. சென்னை நகரின் பல பகுதிகள் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறாகள். குடிநீருக்காக காலி குடங்களுடன் பெண்கள் அலையும் காட்சிகள் பல இடங்களில் காணப்படுகிறது.

சென்னை நகரின் மக்கள் தொகை 50 லட்சமாக இருந்தபோது தினமும் 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் தொகை 70 லட்சத்தை தாண்டிவிட்டபோதிலும் இப்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை நகரின் பல பகுதிகளில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தான் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் ஏரிகளில் ஓரளவுக்கு நீர் வந்தாலும் குடிநீர் தேவையை முழுவதும் பூர்த்தி செய்ய முடியவில்லை.

தற்போது நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவர அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதைஅடுத்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு சென்று ஏற்கனவே தண்ணீர் கொண்டுவர பயன்படுத்திய வேகன்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டனர். கடந்த 2001ஆம் ஆண்டு சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த தண்ணீர்
வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் தற்போது ரயில்கள் மூலம் ஈரோடு மற்றும் நெய்வேலி ஆகிய நகரங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து 12 மணி நேரத்தில் ரெயிலில் தண்ணீர் வந்துவிடும். ஒரு ரெயிலில் தினமும் 60 வேகன்களில் தண்ணீர் கொண்டுவர முடியும். ஈரோட்டில் காவிரி கரையோரம் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும். இதேபோல் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்தும் தண்ணீர் எடுத்து வர முடிவு செய்துள்ளனர். நெய்வேலியின் 3 சுரங்கங்களும் மிகவும் ஆழமாக தோண்டப்பட்டு இருப்பதால் பெருமளவு தண்ணீர்வெளியேற்றப்பட்டு சுத்திகரித்து குடிநீராக வழங்கப்படுகிறது. அந்த தண்ணீரையும் லாரிகளில் எடுத்துவர ஆலோசித்து வருகிறார்கள்.

தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு குடிநீருக்காக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும், ஆடிபெருக்கு விழாவுக்காக 4 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

கோடைமழை கை கொடுத்தால் தற்போதைய நீர்இருப்பை கொண்டு சமாளித்து விடலாம். மழை பொய்த்தால் நெய்வேலி, ஈரோட்டில் இருந்து ரெயிலில் தண்ணீர் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவேதான் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: To Solve the drinking water crisis in Chennai, Tamilnadu Government has to bring the water from Erode and Neyveli Lignite Mines through Trains.