chennai-corporation-3110201சென்னை மாநகராட்சியின் இணையதளங்களில் சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் வரைபட அங்கீகாரத்தையும் தெளிவாக பிரசுரிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனிமேல் யாரும் யாருடைய கட்டிடங்களின் வரைபடத்தையும் பார்க்க முடியும்.

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் மதன் உள்பட 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனிவில், “சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு 2-வது அவென்யூ குடியிருப்புப் பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தைச் சுற்றிலும் விடவேண்டிய இடைவெளியை அந்த கட்டிடத்தை கட்டுபவர் முறையாக விடவில்லை என்றும் வரைபடத்தின் படி அந்த கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த கட்டிடத்தை மூடி சீல் வைக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த போது அந்த கட்டிடம் கட்டியதில் எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த அதிகாரி பொய்யான அறிக்கை தாக்கல் செய்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு உண்மையை மறைத்து பொய்யான அறிக்கை தாக்கல் செய்த அந்த அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து 3 நாட்களுக்குள் அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு: இந்த நீதிமன்றத்தை திசை திருப்பும் வகையில், உண்மையை மறைத்து அறிக்கை சமர்ப்பித்த அதிகாரியை எச்சரிக்கிறோம். இது தொடர்பாக அவரது பணிநடத்தை குறிப்பிலும் குறிப்பிட உத்தரவிடுகிறோம்.

இந்த மனுவில் கடந்த மார்ச் 8ஆம் தேதி, இந்த கட்டுமானம் குறித்த அங்கீகார வரைபடத்தை மாநகராட்சி வெப்சைட்டில் வெளி யிட உத்தரவிட்டோம். இந்த உத்தரவை சென்னை மாநகராட்சியில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் ஏன் அமல்படுத்தக் கூடாது? எனவே இனி சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் வரைபட அங்கீகாரமும் மாநகராட்சியின் இணையதளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கட்டிடத்தை கட்டுபவர் என்ன மாதிரியான கட்டிடம் கட்டப்போகிறோம் என்பதை முன்கூட்டியே அதில் பிரசுரிக்க வேண்டும். மாநகராட்சியும், சிஎம்டிஏ நிர்வாகமும் அந்த வரைபடம் எல்லோரும் நன்றாகப் பார்க்கும் வகையில் உள்ளதா? இல்லை கண்துடைப்புக்காக போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக உள்ள சட்டதிட்டங்களை பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு கொள்ளும் வகையில் அடிக்கடி விளம்பரப்படுத்த வேண்டும்” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

English Summary:The Chennai Building maps have to register on the Chennai Corporation website. High Court orders.