மத்திய நிதியமைச்சர் கடந்த மாதம் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்திற்கு மேல் எந்தப் பொருள் வாங்கினாலும் நிரந்தர கணக்கு எண் என்ற பான்கார்டு அவசியம் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என தங்க நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க நகை வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் என்.அனந்த பத்மநாபன் அவர்கள், ‘ மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், தங்கநகை விற்பனையில் 50 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்றும் எனவே, ரூ.1 லட்சத்துக்குமேல் பொருள்கள் வாங்குவதற்கு பான் அட்டை அவசியம் என்ற அறிவிப்பில் இருந்து தங்க நகைக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தங்கத்துக்கான சுங்கவரியை 10 சதவீதத்திலிருந்து, 2 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.