பொதுமக்களின் பாதுகாப்புக்கு குறிப்பாக பெண்களீன் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழக காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இயங்கும் செல்லிடப்பேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
நேற்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைலேஷ்குமார், “மதுரை நகரில் குற்றங்களைத் தடுப்பற்காக பல்வேறு நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற SOS (Save Our Sole) என்ற செல்லிடப்பேசி செயலி ஓராண்டுக்கு முன்பு மாநகரக் காவல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியை ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு, ஆபத்து நேரங்களில் அதில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிடும். GPRS உதவியுடன் செல்லிடப்பேசி அழைப்பு வந்த இடத்தையும் காட்டிவிடும்.
கடந்த ஓராண்டாக இருந்த வந்த இந்த செயலியை பொதுமக்கள் பலர் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவியர் ஈவ்டீசிங் செய்பவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தியுள்ளனர். ஓராண்டில் 1871 அழைப்புகள் பதிவாகி உள்ளன. இதில், இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
தற்போது, இதை இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் பயன்படுத்தும் நிலைக்கு மேம்படுத்தியுள்ளோம். இணைய வசதி இல்லாவிட்டாலும் ஆபத்தில் இருப்பவர்களின் அழைப்பு குறுந்தகவலாக போலீஸாருக்கு சென்றுவிடும். இதற்காக 40 இரு சக்கர வாகன ரோந்துப் பிரிவு, 25 நான்கு சக்கர வாகன ரோந்துப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அழைப்பு வரும் பகுதிக்கு அருகில் உள்ள ரோந்துப்பிரிவு போலீஸார் அதிகப்பட்சமாக 5 நிமிடங்களுக்குள் அந்தப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். இந்த அழைப்புகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று கூறினார்.
English Summary: The introduction of the new processor to save those in danger without an Internet connection