bsnl-29100215சென்னை, கடலூர் உள்பட தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில், தடையற்ற தொலைத்தொடர்பு சேவை அளிக்கப்படும் என, பிஎஸ்என்எல். நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா தமிழக அரசிடம் உறுதி அளித்துள்ளார். வெள்ளம் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புகளை தற்போது சீரமைக்கும் பணியில் பிஎஸ்என்எல். ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீரமைக்கும் பணிகளை பிஎஸ்என்எல், தலைமை மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, தொலைத்தொடர்பை சீரமைக்கும் பணியில் மாநில அரசுக்கு பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ஞானதேசிகனை நேரில் சந்தித்த ஸ்ரீவத்சவா, தமிழகத்தில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த நெருக்கடியான சூழலில், தடையற்ற தொலைத்தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் வழங்க அனைத்து விதமான உதவிகளையும் பிஎஸ்என்எல் அளிக்கும் என்று தலைமைச் செயலரிடம் அவர் உறுதியளித்தார்.

வெள்ள நிவாரணப் பணியில் தமிழக அரசுக்கு உதவியாக இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, பிஎஸ்என்எல் வாரியத்தின் இயக்குநர் என்.கே.குப்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர் என சென்னை தொலைபேசி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
English summary-uninterrupted service by BSNL