ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் நடைபெற்ற அசோசெம் அமைப்பு நிகழ்ச்சியில், இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பேசியதாவது:

நாடு முழுவதும் 42 கோடி பான் அட்டைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் பான் அட்டையை இணைப்பதன் மூலமாகத்தான், அது உண்மையான பான் அட்டைதானா? இல்லை போலியானதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆதாருடன் பான் அட்டை இணைக்கப்படவில்லையெனில், பான் அட்டையை மத்திய நேரடி வரிகள் வாரியம் ரத்து செய்துவிடும். பானுடன் ஆதார் இணைக்கப்பட்டு, பிறகு வங்கி கணக்குடன் பான் இணைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரின் வரவு செலவு குறித்த விவரங்களை வருமான வரித்துறை தெரிந்து கொள்ள முடியும். இதேபோல், பல்வேறு அமைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், தகுதியுடைய நபருக்குதான் அரசின் நலத்திட்ட உதவி செல்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு 5.44 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். நிகழாண்டில் அந்த எண்ணிக்கை 6.31 கோடியாக அதிகரித்துள்ளது. 95 லட்சம் புதிய நபர்களை வருமான வரி வளையத்துக்குள் வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது.

நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 125 கோடியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 7.5 சதவீதமாக உள்ளது. அப்படியிருக்கையில், 1.5 லட்சம் பேர்தான், தங்களது வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக தெரிவித்துள்ளனர். இது ஏமாற்றத்தை தருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் உள்ளன. ஆனால் அதுகுறித்த தகவலை, வருமான வரி கணக்குத் தாக்கலில் அவர் தெரிவிப்பதில்லை. இதுபோல் தகவல் தெரிவிக்காமல் இருப்பதும், மோசடிதான். அது சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.

நேர்மையாக வரி செலுத்துவோர், வருமான வரித்துறையால் மதிக்கப்படுவர். அதேநேரத்தில் வரி செலுத்தாமல் ஏமாற்றுவோர், வருமான வரித்துறையின் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்றார் சுஷில் சந்திரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *