water-problem-26102015சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் மட்டும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. யும் ஆக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது.

ஆனால் ஒப்பந்தப்படி கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வழங்க வேண்டிய 8 டி.எம்.சி. தண்ணீரில் குறைந்த அளவு மட்டுமே ஆந்திரா வழங்கிய நிலையில், தற்போது தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த ஜூன் மாதம் கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்று ஆந்திர அரசு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் 20 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட்டது.

அதன் பிறகு ஆந்திர மாநிலத்தில் போதிய மழையின்மை காரணமாகவும் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாகவும் சென்னைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி, செங்குன்றம் ஏரிகள் வறண்டன. சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உரிய தண்ணீரை திறந்துவிட ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக உயர் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் உடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் குறைந்த அளவு தண்ணீரே கிருஷ்ணா நதிநீர் மூலம் பெறப்படுகிறது. தற்போது 2 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் கேட்டு ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு விரிவான கடிதமும் எழுதப்பட்டு உள்ளது.

ஆந்திராவில் உள்ள அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லை என்று ஆந்திர அதிகாரிகள் கூறினர். பொதுவாக கண்டலேறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட உடன் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாது. தற்போது இருக்கும் தண்ணீர் ஜனவரி மாதம் வரைக்கும் போதுமானதாக உள்ளது.

ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க இருக்கிறது. இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. வீராணம் ஏரியிலும் 1 டி.எம்.சி. தண்ணீர் வரை இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி நன்றாக பெய்தால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்English summary-Chennai city to face Water crisis