rajeshlakhoniதமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று  தமிழகம் முழுவதும் 73 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்திருந்த போதிலும் தலைநகரான சென்னை மாவட்டத்தில் மட்டும் வாக்குப் பதிவு மிகவும் குறைந்ததற்கான காரணத்தை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: சென்னை உள்பட நகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப் பதிவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்வோம். எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்களே முடிவு செய்வர். வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு மறுவாக்குப் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். ஆவணங்களில் தவறுகள் ஏதும் இல்லாவிட்டால் மறுவாக்குப் பதிவுக்கு வாய்ப்பில்லை.

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சமூக ஊடகங்கள் மூலமாக தேர்தல் துறை பிரசாரம் செய்தது. இதற்காக ரூ.13.50 லட்சம் செலவிடப்பட்டது. மொத்தமாக விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மட்டும் ரூ.35 லட்சம் செலவானது. இருப்பினும் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பதிவான 73 சதவீதம் அளவுக்கு மட்டுமே இப்போதும்  எட்டியுள்ளது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர்கள் 5.5 கோடி இருந்தனர். ஆனால், இப்போது 30 லட்சம் அதிகரித்து 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாக்குப் பதிவு சதவீதம் குறையும்’ இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.