பாரத பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியால் கடந்த் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இரண்டாம் ஆண்டாக உலகம் முழுவதும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 11 பொது இடங்களில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகளிலும் திறந்த வெளியில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மெரினா கடற்கரையில் 100 பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. இதே போல காந்திசிலை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் அருகிலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ராணி மேரி கல்லூரியில் நடந்த யோகா வகுப்பில் 35 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் ஈஷா யோகா மையம் சார்பில், சென்னை எத்திராஜ் கல்லூரி, தாம்பரம் சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மையங்களில் 264 யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன இதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 75 ஆயிரம் பேருக்கு கட்டணமின்றி யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல 45 ஆயிரம் பள்ளி மாணவ- மாணவிகளும் யோகா கற்றுக்கொண்டுள்ளனர். இதில் 25 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் அடங்குவர்.
இன்று நடந்த யோகா பயிற்சியில் சிறுவர் -சிறுமிகள் பலரும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை எளிதாக செய்தனர். அதே நேரத்தில் நடுத்தர வயதை எட்டிய, உடல் பருமனான பலர், கொஞ்சம் சிரமப்பட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.
வயது வித்தியாசமின்றி யோகா வகுப்புகளில் கலந்து கொண்ட அனைவருமே, யோகா பயிற்சிக்கு பின்னர் தங்களது மனதும், உடலும் இதமாகி ஒருவித புத்துணர்ச்சி கிடைத்திருப்பதாக தெரிவித்தனர். இதுவரை யோகா என்றால் என்னவென்றே தெரியாத பலரும் இந்த யோகா தினத்தில் அதன் சிறப்பை அறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Yoga Day in Chennai. Thousands of civilians accumulated