annauniversityகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்பை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்பது கடினமாக ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது பெருகி வரும் பொறியியல் கல்லூரிகள், மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியின்மை ஆகிய காரணங்களால் மாணவர்கள் பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. மாணவ, மாணவியர்களின் கவனம் தற்போது கலை,அறிவியல் கல்லூரிகளின் பக்கம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எந்த வேலைக்கு சென்றாலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தகுதியையே பல முன்னணி நிறுவனங்கள் கேட்பதால், கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்வதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 116 இடங்கள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம் வாங்கிச்சென்ற போதிலும் பலர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவில்லை.

ஜூலை 1ஆம்தேதி பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பொது கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வருகிற 30ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் முதல்நாள் கவுன்சிலிங்குக்கு ஆயிரத்து 256 பேர் தான் வந்து இருந்தனர். முதல்நாள் கவுன்சிலிங்குக்கு 2 ஆயிரத்து 17 பேர் அழைக்கப்பட்டு இருந்த நிலையில் 757 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. இடம் கிடைத்தவர்களில் சிலர் வேறு படிப்புகளில் சேர்ந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

நேற்று வரை 99 ஆயிரத்து 675 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால், 71 ஆயிரத்து 838 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். 27 ஆயிரத்து 474 பேர் வரவில்லை. இடம் கிடைத்தவர்களிலும் 363 பேர் என்ஜினீயரிங் கல்லூரியில் சேராமல் வேறு படிப்புகளை தேர்ந்தெடுத்து எடுத்து விட்டனர். இதனால் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 21 ஆயிரத்து 641 ‘என்ஜினீயரிங்’ இடங்கள் காலியாக உள்ளன.

மீதம் உள்ள நாட்களில் மேலும் 20 ஆயிரம் மாணவ மாணவிகள் ‘கவுன்சிலிங்’ பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.

இதுவரை நடந்த கவுன்சிலிங்கில் சில கல்லூரிகளை ஒரு மாணவர் கூட தேர்வு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. ஒரு சில கல்லூரிகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் மட்டுமே சேர்ந்துள்ளதால் அந்த கல்லூரிகளில் சிக்கலில் உள்ளது.

பொறியியல் படிப்புகளின் மீது மாணவர்களின் கவனம் மீண்டும் திரும்பவேண்டுமானால், தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்வதோடு, பொறியியல் படித்து முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கிட அரசு ஆவண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

English Summary:1 lakh seats The plight of Engineering Colleges