கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வரும் நிலையில் தற்போது பொதுமக்கள் பெருமளவில் தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கி வருகின்றனர். இன்னும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மத்திய அரசு தங்க டெபாசிட் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்க டெபாசிட் திட்டத்தை அறிவித்தார். இதன்படி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களிடம் உபரியாக உள்ள தங்க நகைகளை பிஐஎஸ் தர சோதனைக்கு பின்னர் வங்கிகளில் தங்க சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடம் முதலீடு செய்ய வேண்டும் மேலும் குறைந்த பட்சம் 30 கிராம் தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் தங்கத்திற்கு பணமாகவோ அல்லது தங்க நகை யூனிட்டுகளாகவோ வட்டி வருமானம் கிடைக்கும்.

முதல்கட்டமாக இந்த திட்டம் சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டுல் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் நோக்கம், மக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை பீரோக்களில் வீணாக பூட்டி வைக்காமல் டெபாசிட் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதன்மூலம் பாதுகாப்பு பயமும் இல்லை. மேலும் தங்க நகை விற்பனையாளர்கள் தங்களது தங்க நகைக் கணக்கு மூலம் கடன் பெற முடியும். வங்கிகள் மற்றும் பிற முகவர்கள் தங்கத்தை பணமாக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கும் என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை பணமாக்க முடியும். உள்நாட்டு தங்க தேவையை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். மேலும் இந்த திட்டம் வெற்றியடைந்தால் தங்க இறக்குமதியை குறைக்கவும் வாய்ப்புள்ளது.

English Summary: Central Government has to introduce Fixed Deposit on Golden Ornaments.