இந்தியா முழுவதும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளால் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரம் வரை 5.29 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மாநில மக்கள்தொகை பதிவு இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். மேலும், பயோ மெட்ரிக் பதிவு செய்யும் பணி 84.54 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட 32 மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறன. தற்போது, 640 நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 5 கோடியே 65 லட்சம் பேரிடம் இருந்து ஆதார் அட்டைக்கு பயோ மெட்ரிக் (கருவிழி, கைரேகை) பதிவுகள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 5 கோடியே 29 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை பெறுவதிலும், பயோ மெட்ரிக் பதிவு செய்வதிலும் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையைப் பொருத்தவரையில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். பயோமெட்ரிக் பதிவு செய்யும் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் நிறைவடையாததால், கால அவகாசம் மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதேநேரத்தில், ஆதார் பணிகளை விரைவுபடுத்த பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு ஆதார் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையின் மூலம் இதற்கான விவரங்கள் மாணவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன், ஆதார் அட்டைக்கான பயோ மெட்ரிக் பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
English Summary: Aadhaar card issued 5.29 crores peoples in Tamilnadu. Population Registration Associate Director Information.