இந்தியா முழுவதிலும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆதார் அட்டைகள் தற்போது இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. வங்கிக்கணக்கில் இருந்து கேஸ் மானியம் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டைகள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களிலும் ஆதார் அட்டை எண்ணை குறிப்பிடும் வகையில் புதிய படிவங்களை அச்சடிக்கும் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், பிறந்த இடம் அல்லது இறந்த இடம், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் இச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இனிவரும் காலங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதன் காரணமாக இனிமேல் பிறப்பையும் இறப்பையும் பதியும் செய்யும்போது ஆதார் எண்களை குறிப்பிடும் வகையில் புதிய படிவங்களை தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அச்சடிக்கவுள்ளன.

பிறப்பை பதிவு செய்யும்போது பெற்றோர்களின் ஆதார் எண்ணும் இறப்பை பதியும் செய்யும்போது இறந்தவர் ஆதார் எண்ணுடன் அவரது தாய், தந்தையர் அல்லது கணவன்/ மனைவியின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்

இதன் ஒருபகுதியாக, புதிதாக அச்சடிக்கப்படும் படிவங்களில் ஆதார் எண் குறிப்பிடுவதற்கான வசதியை அளிக்கும்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. மேலும், பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆதார் எண்ணை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது “ஆதார் எண் குறிப்பிடும் வசதியுடன் புதிய படிவங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அச்சடித்து வைக்கப்பட்டுள்ள பழைய படிவங்களை விநியோகித்து முடித்த பிறகு, இந்த புதிய படிவங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.

சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற இப்போதைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. எனினும், ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, அந்த எண்ணுடன் சான்றிதழ் வழங்கப்படும். புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணிகள் 100 சதவீதம் முடிந்த பிறகு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இது பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க உதவும்” என்றனர்.

English Summary : Indian Government has planned to add Aadhar number into birth and death certificate.