முதியோர் உதவித் தொகை, மணியார்டர் உள்பட பல்வேறு அஞ்சல் சேவைகளை வழங்கும் அஞ்சல் துறை பணியாளர்கள் அன்பளிப்பு கேட்டால் அதுகுறித்து பொதுமக்கள் உடனே அஞ்சல்துறை மேலதிரிகளுக்கு புகார் செய்ய வேண்டும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:

சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் தலைமை அஞ்சல் வட்டங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்கள் மூலமாக பொதுமக்கள், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சல் சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு பணவிடை வழங்கப்படும்போது அஞ்சல் ஊழியர்களுக்கு அன்பளிப்பு என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ வழங்க வேண்டாம்.

ஒரு கிராமத்தில் உள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும், ஒருசேர பணவிடை பட்டுவாடா செய்யும் அஞ்சல் ஊழியர்களுக்கு அன்பளிப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அஞ்சல் ஊழியர்களுக்கு முழு பணத்தையும் பட்டுவாடா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவேளை அஞ்சல் ஊழியர்கள் பணத்தைப் பிடித்துக்கொண்டு பட்டுவாடா செய்தால் பயனாளிகள் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்.

அஞ்சல் துறை ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது பணம் கேட்டாலோ அல்லது பணத்தை பிடித்துக் கொண்டு வழங்கினாலோ அது தொடர்பான புகார்களை அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், சென்னை, 600002 என்ற முகவரியிலும், 044-28592877 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதேபோல, இணை இயக்குநர், மத்தியப் புலனாய்வுத் துறை, சென்னை 600006 என்ற முகவரி மற்றும் 044-28270992 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இதுபோன்ற புகார்கள் ஏற்கெனவே பெறப்பட்டு அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடைய அஞ்சல் ஊழியர்கள் பணியிடை நீக்கம், பணியிலிருந்து முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English Summary : Report if someone ask bribe in Postal Department Chennai.