சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் பெங்களூர் ரயிலில் வெடித்த வெடிகுண்டு சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று தொலைபேசியில் பேசிய மர்ம மனிதர் ஒருவர், சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லிக்குச் செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கும் என கூறி விட்டு உடனே இணைப்பைத் துண்டித்து விட்டார். இது குறித்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் உரிய காவல்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தமிழ்நாடு விரைவு ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிர ஆய்வு நடத்தினர். ஆனால் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை என்பதால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் ரசூல்லா என்பதும், அவர் இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் மது போதையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். எனினும், போலீஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English Summary : Stranger called Chennai Police Commissioner’s Office control room and stating bomb in Tamil Nadu express train.