யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் இவ்வாண்டு நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய 24 வகையான பணிகளுக்காக நடத்திய தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது.சுமார் 9 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றனர்.

சென்னையில் மட்டும் இந்த தேர்வினை 900 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவின்படி மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இரா. சிங்கால் முதல் இடத்தையும், ரேணு ராஜ் 2-ம் இடத்தையும், நிதிகுப்தா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தமிழகத்தை சேர்ந்த டி.சாரு ஸ்ரீ 6வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் கடந்த 7 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்விற்கு மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று தேர்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, எஸ்.அருண்ராஜ், ஆர்.ராஜகணபதி, பி.மாலதி, பி.பிரியங்கா, ஏ.கலைச்செல்வி, எம்.திவ்யா, வி.பத்ரி நாராயணன் மற்றும் ஏ.தமீம் அன்சாரியா உள்பட 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 22 மாணவிகளும், 40 மாணவர்களும் அடங்குவார்கள். அகில இந்திய அளவில் மனிதநேய மையத்தில் படித்த ஐ.எஸ்.மெர்சி ரம்யா 32-வது இடத்தையும், எஸ்.அருண்ராஜ் 34-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அருண்ராஜ் டி.ஐ.ஜி. சமுத்திர பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மனிதநேய மையத்தின் நிறுவனர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.

English Summary:Mayor of Chennai practitioners IAS exam success