மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரூ.100க்கு ஸ்மார்ட் கார்டு வாங்கி கொண்டு பயணிகள் பயணம் செய்யலாம். பயணி பயணம் செய்ய செய்ய அந்த தொகை கழிந்து கொண்டே வரும். டிக்கெட் தொகை போக மீதம் அவர் கணக்கில் இருப்பு வைக்கப்படும். முழு தொகைக்கும் பயணம் செய்த பின்னர் ஸ்மார்ட் கார்டை மொபைல் டாப்-அப் மாதிரி டாப்-அப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. ரூ.100 முதல் ரூ.3000 வரை மதிப்பிலான பயணத்திற்கு டாப்-அப் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை பயணிகள் தவிர்த்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் டாப் – அப் செய்யும் போதும், டாப் அப் செய்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு எடுத்த ஸ்மார்ட் கார்டை குடும்பத்தில் உள்ள வேறு உறுப்பினர்களும் பயன்படுத்த தடையில்லை

மேலும் மெட்ரோ ரயில் சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துளது. இதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ் போக்குவரத்து, பயணத்தை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் அங்கிருந்து மாநகர பஸ்சில் பயணம் செய்ய ஏதுவாக டிக்கெட் கார்டு வழங்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் கார்டை பயன்படுத்தும் பயணிகள் பஸ் பயணத்திற்கும் அதையே உபயோகிக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைந்த கார்டு தயாரிக்கப்படுகிறது.

இதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது பரீட்சார்த்த முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. விரைவில் மெட்ரோ டிக்கெட் கார்டுடன் மாநகர பஸ்சிலும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த பயண டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் மாநகர போக்குவரத்து கழகம் மூலம்தான் செய்ய முடியும். பஸ் மற்றும் மெட்ரோ ரெயில் பயணத்திற்கு ‘ஸ்மார்ட்’ கார்டை பயன்படுத்தினால் போதும். அந்த கார்டை பஸ் கண்டக்டரிடம் காண்பித்து அவருக்கு வழங்கும் புதிய சாப்ட்வேர் அடங்கிய நவீன மெஷின் மூலம் பயணிக்கு ரசீது வழங்கப்படும்.

இதனால் பயணிகள் பேருந்துக்கு தனியாகவும், மெட்ரோ ரெயிலுக்கு தனியாகவும் டிக்கெட் எடுக்க தேவை இல்லை. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பயணம் செய்யலாம். கண்டக்டருக்கும் பயணிகளுக்கும் இடையே சில்லறை பிரச்சனை வரவும் வாய்ப்பு இல்லை. ஸ்மார்ட் கார்டு மட்டும் இருந்தால் போதும். ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் கட்டண தொகை கழித்து கொண்டே வரலாம்.

English Summary : Metro Rail Administration plans to introduce smart card for Metro train and MTC bus in Chennai.