சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் அதிக நேரம் தங்குவதாக வந்த புகாரை அடுத்து டிக்கெட் எடுத்த ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்க வேண்டும் என்றும் அதன்பிறகும் ரெயில் நிலையத்தில் பயணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்த அபராத கட்டணம் அதிகபட்சமாக ரூ.100 வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்ற கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருசிலர் இந்த விவரம் தெரியாமல் ரெயில் நிலையங்களில் சுற்றி திரிவதாகவும், பிளாட்பாரத்தில் மிகுந்த நேரம் நிற்பதாகவும் வந்த தகவல்களை அடுத்து இந்த அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி ஒரு ரெயிலை தவறவிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் வரும் மற்றொரு ரெயிலில் கண்டிப்பாக ஏறி செல்ல வேண்டும். தேவையில்லாமல் அங்கு நின்றால் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விடும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுற்றித்திரியும் பயணிகள் குறித்த தகவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

மேலும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் ஒரு சிலர் சில சமயங்களில் தங்களுகே தெரியாமல் சில தவறுகளை தெரியாமல் செய்து விடுவதாகவும், அதாவது ஒருமுறை பயணமாக எடுக்கப்படும் டோக்கனை பெற்றுக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருகிறார்கள் என்றும் இது தவறான செயல் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை செல்லும் ரூ.40க்கான டோக்கனை பெற்றுக் கொண்டு பயணம் செய்யும் ஒரு பயணி ஆலந்தூரில் இறங்கி வெளியே செல்ல வேண்டும். ஆனால் ஒரு சில பயணிகள் மீண்டும் அதே டோக்கனில் கோயம்பேடுக்கு செல்லும் ரெயிலில் திரும்புகிறார்கள். ஒரு முறை பயணத்திற்கு எடுத்த டோக்கனை மீண்டும் திரும்புவதற்கு பயன்படுத்த கூடாது. அப்படி பயணம் செய்து தினமும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அபராதம் செலுத்துகின்றனர்.

மேலும் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் செல்ல டிக்கெட் பெற்ற ஒருவர் பயணம் செய்யாமல் கோயம்பேடு நிலையத்தில் 20 நிமிடத்திற்கு மேலாக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். பயணம் செய்யாமல் ஒருவர் 20 நிமிடங்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் நிற்க அனுமதி உண்டு. அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.10 வீதம் அபராதம் விதிக்கப்படும்.

English Summary : Rs. 10 an hour fined, for people who stayed in Metro train for more than 1 hour.