Aadhar-card-இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்துடன் இந்த பணியை நிறைவு செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 5 கோடியே 70 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை புகைப்படங்கள் எடுக்கப்பட்டு 5 கோடியே 32 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வினியோகமும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆதார் அட்டை வழங்குவதில் முழு இலக்கை அடையும் வகையில் கூடுதல் ஆதார் மையங்கள் செயல்படும் என்று மாநில மக்கள் தொகை இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது:

ஆதார் அட்டை வழங்கும் பணி பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 77.85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ளவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 70 இடங்களில் ஆதார் நிரந்தர மையங்களும் ஐ.சி.எப். சிறப்பு மையமும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல் மேலும் கூடுதலாக ஐந்து இடங்களில் தற்காலிக ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூரில் 81–வது மாநகராட்சி வார்டு அலுவலகம், காமராஜர் மகளிர் மேல் நிலைப்பள்ளியிலும், அண்ணாநகரில் ஜெ.ஜெ. விளையாட்டு மைதானம், அமைந்தகரை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் முகலிவாக்கம் பிரிவு அலுவலகம் ஆகிய 5 இடங்களில் ஆதார் மையங்கள் செயல்படும். இதேபோல தமிழகம் முழுவதும் தேவையான பகுதிகளில் தற்காலிக மையங்கள் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: AadharCard Center more 5 location in Chennai.