b.edதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதலின் படி பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளின் காலம் இந்த கல்வி ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இந்த வழிகாட்டுதலை தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் இதுவரை எதிர்த்து வந்த நிலையில் தமிழகத்திலும் இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியில் மேம்பாட்டு நிறுவன முதல்வரும் பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளருமான ஆர்.பாரதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்.சி.டி.இ வழிகாட்டுதலின்படி தமிழகத்திலும் இந்த ஆண்டு முதல் பி.எட். படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே நடப்பு ஆண்டில் பி.எட், எம்.எட் படிப்புகளில் சேரும் மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்தாக வேண்டும். மேலும் பி.எட், படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்கப்படும். முதல் நாள் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

29ஆம் தேதி கணிதப்பாடப் பிரிவுகளும் 30ஆம் தேதி இயற்பியல், வேதியியல், பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 1ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப்பிரிவினருக்கும், 5ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல், வணிகவியல் பிரிவினருக்கும் பிற்பகல் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary:B.Ed Study Period 2Years from this Year. Tamilnadu Government Notification.