aavinசென்னை மக்களின் பால் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வரும் ஆவின் பால் நிர்வாகம் 16 ஆவின் வட்டாரப் பகுதிகளில், கூடுதலாக 240 ஆவின் சில்லறை விற்பனை மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் நேற்று பால்வளத்துறை மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள், மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோர் பங்கேற்றனர்.  பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை மாநகரில் உள்ள 16 ஆவின் வட்டாரப் பகுதிகளில், ஆவின் ஐஸ்கிரீம், பால் பொருள்களை விற்பனை செய்ய, ஒவ்வொரு வட்டாரப் பகுதிகளிலும் 15 பிரத்யேக ஆவின் சில்லறை மையங்கள் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 240 சில்லறை விற்பனை மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமணா அறிவுரை கூறினார்.

மேலும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, நுகர்வோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு பல்வேறு வகையான ஆவின் பொருள்களைப் பரிசாக வழங்குவதற்கு ஏதுவாக, அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட “கிப்ட் பேக்’ விரைவில் அறிமுகப்படுத்தப்படும். கல்லூரிகளில் அமைந்துள்ள உணவகங்களில், ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய தேவையான அனைத்து வசதிகளையும் ஆவின் நிறுவனம் வழங்கும். இந்தச் சலுகையைப் பள்ளிகள், கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற புதிய முயற்சிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் பி.வி.ரமணா விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9445530503 என்ற செல்லிடப்பேசியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பால்வளத் துறை ஆணையர் சுனீல் பாலீவால், துணை ஆணையர் எஸ்.துரைசாமி, கூடுதல் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், பணிக்குழு பொது மேலாளர் பி.பிரபாகர், விற்பனை பொது மேலாளர் எஸ்.கே.கதிர்வேலு, திட்ட பொது மேலாளர் சி.லோகிதாஸ், பொது மேலாளர் சி.ரவி உள்ளிட்ட ஆவின் நிர்வாக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

English Summary:Aavin addition of 240 retail centers in Chennai. Minister Information.