madras_medical_collegeமருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கிய நிலையில் நேற்று முன் தினம் சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்ற நிலையில் நேற்று முதலாமாண்டு மாணவர்களுக்கு திடீரென விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் தங்கும் இடத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக மூத்த மாணவர்கள் நேற்று போராட்டம் செய்தனர். இதனைஅடுத்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வகுப்புகள் தொடங்கிய மறுதினமே விடுதி மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

சென்னை பாரிமுனையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் போதிய இடம் இல்லை என்ற காரணத்தினால் புதியதாக சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களை வேறு இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சீனியர் மாணவர்கள் விடுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதல்நாள் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு வந்த சுமார் 150 முதலாமாண்டு மாணவர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் கட்டடத்துக்கு மேல் உள்ள அறைகளில் இரவு தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதாகவும், செப்டம்பர் 14-ஆம் தேதி மீண்டும் வகுப்புகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், மாணவிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி விடுதியில் அறைகள் ஒதுக்கப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றதும் வகுப்புகள் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கல்லூரி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Madras Medical College,for first-year students a holiday Suddenly.