சென்னை நகர மக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா குடிநீருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த குடிநீர் மையங்கள் சென்னையில் தற்போது 100 இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் 41 இடங்களில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கே.கே.நகர், முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு செய்து அம்மா குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 18 இடங்களில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றன. வருகிற 30-ந் தேதிக்குள் மேலும் 2 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இது தவிர மேலும் 41 இடங்களில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. டிவிசனுக்கு ஒரு சுத்திகரிப்பு மையம் என்ற அளவில் பொதுமக்கள் தினமும் பயன் பெறக்கூடிய வகையில் அமைக்கப்படுகிறது. மெட்ரோ குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “18 அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 10,690 லிட்டர் தண்ணீர் சுத்தகரித்து வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 94 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு மையம் ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து வழங்குகிறது. பொதுமக்களுக்கு 20 லிட்டர் என்று கணக்கிடாமல் தேவையான அளவிற்கு வினியோகிக்கப்படுகிறது.
குடம், கேன் போன்றவற்றை கொண்டு வந்து மக்கள் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள மக்கள் தினசரி குடிநீர் பயன் பாட்டிற்கு தேவையான நீரை பெற்று செல்கின்றனர் என்று கூறினர்.
English Summary:Amma drinking water centers in 41 locations in Chennai