ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸனும், தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதன் மூலம் ஆசியப் போட்டியில் இந்தியவின் தங்க வேட்டை 12-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகாரத்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் 3 நிமிடங்கள் 44 வினாடிகள் 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேசமயம், இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 800 மீட்டர் ஓட்ட சாம்பியன் மன்ஜித் சிங், 4-வது இடத்தையே பிடித்தார். ஈரான் வீரர் அமிர் மொராடி 3 நிமிடங்கள் 45 வினாடிகள், 62 மைக்ரோ நொடிகள் வந்து வெள்ளிப்பதக்கத்தையும், பஹ்ரைன் வீரர் முகமது தியோலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடர் ஓட்டத்தில் தங்கம்
மகளிருக்கான 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றனர். இந்திய அணியில் ஹிமா தாஸ், பூவம்பா ராஜு, விஸ்மயே கொரோத், சரிதாபென் கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் கொண்ட அணி பந்தைய தொலைவை 3 நிமிடங்கள் 28 வினாடிகள், 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.
வட்டு எறிதல்
மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீமா பூனியா 62.26 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
முதலிடத்தைப் சீன வீராங்கனைகள்பிடித்தனர். சீனாவின் செங் யாங் 65.12 மீட்டர் எறிந்து தங்கத்தையும், பெங் பின் 64.25 மீட்டர் எறிந்து வெள்ளியையும் வென்றனர்.
1500 மீ்ட்டரில் வெண்கலம்
மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில், இந்திய வீராங்கனை பலகீழ் உன்னிக்கிருஷ்ண சித்ரா வெண்கலப் பதக்கத்தை வென்றார். பந்தையத் தொலைவை 4 நிமிடங்கள்,12 வினாடிகள், 56 மைக்ரோ நொடிகளில் அடைந்து 3-ம் இடத்தைப் பிடித்தார்.
முதலிடத்தை பஹ்ரைன் நாட்டு வீராங்கனை பெப்காட் பெல்கிடன் தங்கப் பதக்கத்தையும்(4:7:88), வெள்ளிப்பதக்கத்தை பஹ்ரைன் நாட்டு வீராங்கனை பெலே டிகிஸ்ட்(4:912) வென்றார்.