rajeshlakhoniதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த முறை தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் கார்களில் கொடிகள் கட்டுவதற்கும் பேனர் வைப்பதற்கும் புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் பேனர்களையும், கொடிகளையும் வைத்துகொள்ளலாம். ஆனால், பொதுஇடங்கள், சாலை ஓரங்களில் வைக்கக் கூடாது.

அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடிகளை வைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க கூடுதலாக பார்வையாளர் நியமிக்கப்படுவர் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி, மாவட்டத்துக்கு ஒரு தேர்தல் பார்வையாளர் என்ற நிலையில் இருந்து, தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுவார்.

முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள், பதட்டம் நிறைந்த இடங்களில் பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கை 3-லிருந்து 5ஆக உயர்த்தப்படும்.

வண்ண வாக்காளர் அடையாள அட்டைக்காக, இதுவரை 6.14 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். இந்த மாதத்துக்குள் அவர்களுக்கு அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி அளிக்கப்பட்ட மனுக்களில், சுமார் 26 ஆயிரம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்ய ஒளிபரப்புக்கு 7 நாள்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். செய்தித்தாள்களில் விளம்பரம் அளிப்பதற்கு அனுமதி அவசியமில்லை.

வாக்குப் பதிவு தேதி மற்றும் அதற்கு முந்தைய தினம் விளம்பரம் அளிக்க அனுமதி கட்டாயம். பெயர், புகைப்படம் ஆகியவற்றுடன் விளம்பரம் வெளியிடப்பட்டால் அதற்கான செலவு தனிப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்

இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

English Summary: Banners put up in public places is prohibited. Electoral officer Rajesh lakkani ordered.