தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5.82 கோடி என்று தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் வழங்கும் பணியை, அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தொகுதிக்கும் பகுதிவாரியாக பூத் சிலிப்கள் பிரிக்கப்பட்டு, தனித்தனி கவர்களில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் வழங்குவது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 10ஆம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பூத் சிலிப்களை அளிக்கக் கூடாது என்றும் வழங்கப்படாத சிலிப்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அலுவலகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்குவதால், அரசியல் கட்சிகள் தனியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

பூத் சிலிப் வழங்க அதிகாரிகள் வரும் நேரத்தில் வீடு பூட்டப்பட்டிருந்தால் அந்த வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ் போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆணையம் அங்கீகரித்த அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

English Summary : Booth Slip distribution in Tamil Nadu.