britainandeuஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகலாமா? விலக வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளிவந்துள்ளது.

இதன்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து 52% மக்களும், அதில் நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து 48% மக்களும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விரைவில் பிரிட்டன் விலக உள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற பொது வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளதாகவும், தங்கள் நாடுகளுக்கு தகுந்தவாறு ஒன்றியத்தின் விதிகளை மாற்றம் செய்ய முயற்சிகள் நடக்கும் இதனால் ஐரோப்பிய ஒன்றியம் உடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் கூறியுள்ளார்.

ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் பிரிட்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார இடைவேளி உருவாகும் என்றும் மேலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்னைகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

இந்த முடிவின் காரணமாக உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 11.30 மணி அளவில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3.7 சதவிகிதமும், நிஃப்டி 3.8 சதவிகிதம் சரிந்துள்ளன. ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் இறங்கியுள்ளது. இது மேலும் தொடர வாய்ப்புள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று ரூ. 68 ஐ தாண்டியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.1200க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1500க்கும் அதிகமாக உயரந்துள்ளது.

English Summary: Britain left from the European Union. Indian Share market down.