சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் ஆங்காங்கே பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
சென்னையில் உள்ள பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வந்த அரசுப் பேருந்து ஒன்றில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நுங்கம்பாக்கம் வந்ததும், அதிலிருந்த பயணிகளை மாணவர்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு, மேளதாளங்களுடன் நடனமாடியப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையின் மீதும் ஏறி நின்று நடனமாடியப்படி சென்றதால், பேருந்து வேகமாக செல்ல முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்றபோது பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்தனர். இதேபோல சுங்கச்சாவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்களை போலீஸார் பாரிமுனையில் வைத்து எச்சரித்து அனுப்பினர்.
நேற்று காலை ஒரே நேரத்தில் மாணவர்கள் பேருந்து தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை பெருநகரத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியைடைந்தனர்.
English Summary : Bus Day celebrated by Students, Public suffered.